search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறையூர் அருகே முத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
    X

    துறையூர் அருகே முத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியானார்கள்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ளது முத்தையம்பாளையம் கிராமம். இங்குள்ள மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த விழாவின்போது பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கப்படும். அதாவது சாமிக்கு காணிக்கையாக படைக்கப்படும் அந்த காசுகளை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    எனவே இந்த காசுகளை பெற ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் திருச்சி மட்டுமின்றி சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குவிவார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதல் கோவிலுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி பிடிக்காசு வாங்கி செல்லும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் இன்று காலை சுவாமிக்கு காணிக்கைகள் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து அந்த காணிக்கை காசுகளை பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை பூசாரி தனபால் வழங்கி தொடங்கி வைத்தார்.

    முதலில் பக்தர்கள் வரிசையாக சென்று பிடிக்காசுகளை பெற்று வந்த நிலையில் திடீரென அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பிடிக்காசுகளை பெற முயன்றனர்.

    இதில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் கீழே விழுந்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறி மிதித்து சென்று பிடிக்காசுகளை வாங்க முயன்றனர்.

    இந்த இடிபாடுகளுக்குள் பக்தர்கள் ஏராளமானோர் சிக்கினர். அவர்களில் 7 பேர் பலத்த காயம் அடைந்தும், மூச்சுத்திணறியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பக்தர்கள் கூட்டத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் காயம் அடைந்த பக்தர்கள் 10 பேரை மீட்டு 108 ஆம்புலன்சு வேன் மூலம் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 7 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    1. கந்தாயி (வயது 38), மங்களபுரம், திருமானூர், அரியலூர் மாவட்டம்.

    2. ராமர் (52), பின்னங்குளம், வேப்பந்தட்டை, பெரம்பலூர் மாவட்டம்.

    3. சாந்தி (47), கோனேச்சி மரம், சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்.

    4. பூங்காவனம் (46), க.பெ. வெங்கடாசலம், பின்னையந்தூர், கடலூர் மாவட்டம்.

    5. லட்சுமி காந்தன் (60), நன்னியூர், கரூர் மாவட்டம்.

    6. வள்ளி (46), க.பெ. ரவி, பொன்பரப்பி, அரியலூர் மாவட்டம்.

    7. ராகவேல் (52), முருகன்குடி, திட்டக்குடி, கடலூர் மாவட்டம்.

    விபத்து நடந்த இடத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. வரத ராஜூலு, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் பக்தர்களுக்கு ஆறுதல் கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலியான சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×