search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை
    X

    கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை

    கொடைக்கானலில் இரவு நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவி வருகிறது. எனவே தான் வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் வறுத்து எடுத்து வருகிறது. போதிய மழை இல்லாத காரணத்தால் குளுமையாக இருக்கும் இடத்தில் கூட வெயில் சுட்டெரிக்கிறது.

    இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிரிட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் வறண்டு போனது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    எனவே எப்போது மழை பெய்யும் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் வருண பகவான் கண் திறக்கவில்லை. தொடர்ந்து வெயில் சுட்டெரித்ததால் கொடைக்கானல் வந்த பயணிகளும் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள். நேற்று மாலை கரு மேகம் திடீரென சூழ்ந்தது. இரவு நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

    சூறாவளி காற்று தொடர்ந்து வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் கொடைக்கானல் பகுதியில் ஒரு சில இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் வீதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    இதனால் தற்போது ஓரளவு குளுமையாக உள்ளது. தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்த வண்ணம் உள்ளனர். இன்று காலையிலேயே பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரம்யமான சீசனும் இருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதன் காரணமாக பிரையண்ட் பூங்கா, ஏரி, மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு மற்றும் கொடைக்கால் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. எனவே கொடைக்கானல் நகரில் இதனை நம்பியுள்ள தொழில்களும் களை கட்டியது.

    தொடர்ந்து மழை பெய்தால் கோடை சீசன் களை கட்டும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×