search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
    X

    ராமநாதபுரத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி

    ராமநாதபுரத்தில் நேற்று திடீரென்று பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிககுறைவாக பெய்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து மக்கள் குடி நீருக்காக அலைந்து திரிந்து வருகின்றனர். இதனிடையே இந்த ஆண்டு கத்தரி வெயில் எனப்படும் கோடைவெயிலுக்கு முன்னதாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.

    கோடைவெயிலுக்கு முன்னதாகவே இவ்வாறு வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டிவதைத்தால் மக்கள் கோடைவெயிலை நினைத்து அச்சத்தில் இருந்தனர். மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் சொல்ல முடியாத அவதியடைந்திருந்த மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.

    இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நேற்று காலை ராமநாதபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நிமிடங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. காலை 11.45 மணிஅளவில் இடைவிடாமல் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த பலத்த மழை காரணமாக ராமநாதபுரத்தில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வைசியால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை நீரை மக்கள் வீணாக்காமல் குடங்களில் பிடித்து வைத்தனர். கடந்த பல நாட்களாக மக்கள் வெயிலால் அவதியடைந்த நிலையில் திடீரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையால் நிலத்தடி நீர் ஆதாரம் உயர வாய்ப்பு மிக குறைவு என்றாலும் வெப்பக்காற்றால் பகலிலும், இரவிலும் அன்றாட வேலையை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மக்களுக்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×