search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூர் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைப்பு
    X

    குன்னூர் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைப்பு

    குன்னூர் வனப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிற்கு பரவிய காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் சரவண மலை வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் ஏராளமான அரிய மரங்கள், தேயிலை தோட்டங்கள், சிறுத்தை புலி, காட்டெருமை, கருஞ்சிறுத்தைகள், பாம்பு உள்ளிட்ட விலங்குகளும் அரிய வகை பறவைகளும் உள்ளது.

    இந்த வனப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 300 ஏக்கருக்கு மேல் உள்ள வனப்பகுதியில் 10 ஏக்கருக்கு மேல் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவிற்கு தீ பரவியது. இதனை அணைக்க வனத்துறையினர் முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. இந்த மலை பகுதி அருகே ராணுவ அதிகாரிகள் பங்களாக்கள் உள்ளது. இதனை தொடர்ந்து குன்னூர் ராணுவ மையம் மூலம் டெல்லி தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மத்திய அரசு உத்தரவுப்படி கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஊட்டி காமராஜர் சாகர் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து அதில் மோனோ அமோனியம் பாஸ்பேட் உள்பட ரசாயன பவுடர் கலந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

    தீ ஓரளவு கட்டுக்குள் வந்ததால் ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனாலும் புகை மூட்டம் அதிகம் காணப்படுகிறது. குன்னூர் வண்டிச்சோலை, கோத்தகிரி-குன்னூர் சாலை, அட்டரி பகுதியில் புகை மூட்டம் காணப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தீ விபத்தில் அபூர்வ மரங்கள் சேதம் அடைந்து உள்ளது. வனவிலங்குகள் உயிர் இழந்து இருக்கலாம் என தெரிகிறது.

    இதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. தீப்பிடித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் முழுமையாக அணையவில்லை. தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி மீண்டும் ஹெலிகாப்டர் வரவழைக்கப்படும் என்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் ஆழியார் அருகே அடர்ந்த வனப்பகுதியில் தீப்பிடித்தது.

    இந்த தீயை அணைக்கும் பணியில் பொள்ளாச்சி வனத்துறையினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆனாலும் முழுமையாக அணைக்க முடியவில்லை. ஒரு பகுதியில் மட்டும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்ற பகுதியில் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

    ஆழியார் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆங்காங்கே தீ எரிந்தவாறு உள்ளது. இதனையும் அணைப்பதற்காக நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.



    Next Story
    ×