search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை
    X

    4 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை

    தமிழ்நாட்டில் 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. #LiquorSale #TamilNadu
    சென்னை:

    தமிழக அரசுக்கு அதிக வருவாய் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மூலமே கிடைக்கிறது. மதுபானங்கள் விலை அதிகரித்தாலும் விற்பனை மட்டும் குறைவது இல்லை. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம். தற்போது தேர்தல் காலம் என்பதால் மது விற்பனை அதிகரித்துள்ளது.

    அதன்படி கடந்த 12-ந்தேதி ரூ.117 கோடி, 13-ந்தேதி ரூ.141 கோடி, 14-ந்தேதி (தமிழ் புத்தாண்டு) ரூ.165 கோடி என்று மது விற்பனை அன்றாடம் ரூ.100 கோடியை தாண்டி விற்பனையாகி இருக்கிறது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, 16-ந்தேதி (நேற்று முன்தினம்) முதல் 18-ந்தேதி(நாளை) வரை 3 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 15-ந்தேதி இரவு, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை போட்டி, போட்டு மதுபிரியர்கள் வாங்கி சென்றனர். இதன் காரணமாக அன்றைய தினம் மட்டும் ரூ.216 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    இதுகுறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.639 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.139 கோடி, சென்னையில் ரூ.136 கோடி, திருச்சி ரூ.133 கோடி, சேலம் ரூ.120 கோடி, கோவை ரூ.111 கோடி என மது விற்பனையாகி உள்ளது.’ என்றார்.

    ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு தொடர் விடுமுறையால், கள்ளச்சந்தையில் எங்கேயாவது மதுபானங்கள் விற்பனை நடக்கிறதா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.   #LiquorSale #TamilNadu
    Next Story
    ×