search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
    X

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடை சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதையொட்டி ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக சமவெளி பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த பெண்கள் உள்பட 11 பேர் கோவையில் இருந்து சுற்றுலா வேன் மூலம் ஊட்டிக்கு வந்தனர். பின்னர் நேற்று ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு புறப்பட்டனர். சுற்றுலா வேனை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த கருப்பையா மகன் சந்தோஷ்(வயது 24) ஓட்டினார். மாலை 4 மணியளவில் மேல்தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வேன்சென்றபோது திடீரென பிரேக் பிடிக்காமல் போனது.

    இருப்பினும் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, வேனை சாலையோரம் உள்ள மண் திட்டின் மீது மோதி நிறுத்த முயன்றார். ஆனால் மண் திட்டின் மீது மோதிய வேன் எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோத்தகிரி போலீசார், சாலையில் கவிழ்ந்த சுற்றுலா வேனை அங்கிருந்து சாலையோரத்துக்கு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×