search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு லோக் ஆயுக்தா நடுவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் பதவி ஏற்றார்
    X

    தமிழ்நாடு லோக் ஆயுக்தா நடுவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் பதவி ஏற்றார்

    தமிழ்நாட்டில் உயர் பதவி வகிப்பவர்கள் தொடர்பான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பின் முதல் நடுவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் இன்று பதவி ஏற்றார். #LokayuktaOmbudsman #TNLokayukta #TNLokayuktaOmbudsman #JusticePDevadossPDevadosssworn
    சென்னை:

    உயர் பதவி வகிக்கும் பிரதமர், மத்திய மந்திரிகள், முதல் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசார்ப்பதற்கென்று நாட்டின் பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

    ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்கப்படாமல் இருந்தது. இதுவரை லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்காமல் உள்ள மாநிலங்கள் விரைவில் அமைத்தாக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிமன்ற நடுவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடந்த 2-ம் தேதி அறிவித்திருந்தது.

    இந்த பதவிக்கான நடுவரை பரிந்துரைக்கும் குழுவால் முன்மொழியப்பட்ட பெயர்களில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தேர்வு குழு இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

    புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா நடுவர் பி.தேவதாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் முதல் நடுவராக தேவதாஸ் இன்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

    அவருடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். #LokayuktaOmbudsman #TNLokayukta #TNLokayuktaOmbudsman #JusticePDevadossPDevadosssworn 
    Next Story
    ×