search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்
    X

    சிலை கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்

    சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #PonManickavel #IdolSmuggling #SC
    சென்னை:

    தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை செய்த காதர் பாஷா உள்பட பல அதிகாரிகள், பழங்கால சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து வக்கீல் யானை ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். இந்த விசாரணையின்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஏ.ஜி.பொன்.மாணிக்கவேல் பணியாற்றினார்.

    அவர் சிலைக்கடத்தல் குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், அவரை திடீரென ரெயில்வே ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், சிலை கடத்தல் வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளையும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா ஸ்தபதி உள்பட பல முக்கிய புள்ளிகளை கைது செய்தனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.



    இதையடுத்து. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மட்டும், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள் என்றும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்த நிலையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளையும், எதிர் காலத்தில் பதிவாகும் புதிய வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது’ என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. பின்னர், இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

    இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் சிறப்பு டிவிசன் பெஞ்சை, ஐகோர்ட்டு அமைத்தது.

    இந்த சிறப்பு டிவிசன் பெஞ்ச், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கினர்.

    ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் போலீசார், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 10க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளனர்.

    சிலைக்கடத்தல் வழக்கில் 47 பேரை கைது செய்துள்ளனர். ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு 28 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த 28 ஆண்டுகளில் இந்த பிரிவு போலீசார் செய்த பணியை, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், ஓர் ஆண்டிலேயே முறியடித்து விட்டனர்.

    எனவே, சிலைக்கடத்தல் வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசாணையை ரத்து செய்கிறோம். அதேநேரம், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புப் படையின் புலன்விசாரணை எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றோம்.

    நவம்பர் 30-ந்தேதியுடன் ஓய்வு பெறும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓர் ஆண்டுக்கு நியமிக்கின்றோம். அந்த பதவியை அவர் உடனடியாக ஏற்கவேண்டும். இதுவரை இந்த தனிப்பிரிவில் அவர் பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவருக்கு வழங்கவேண்டும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. சிலை கடத்தல் வழக்கு விசாரணையை பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது.

    மேலும் சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதே நேரத்தில் வழக்கை விசாரிக்கும் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #IdolSmuggling #SC
    Next Story
    ×