search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் - கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்கு
    X

    வேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் - கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்கு

    வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதல் கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார்.

    கடந்த 1-ந்தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையை பொருத்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்துள்ள மனுவின்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வெகுநேரம் நடந்த ஆலோசனையில் முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இதனால் மாஜிஸ்திரேட் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    இன்று மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் காட்பாடி டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து வேட்பாளர் கதிர்ஆனந்த் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கதிர் ஆனந்த் மீது 125 (ஏ) பிரிவின் கீழ் பிரமான பத்திரத்தில் தவறான தகவல் அளித்தல், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171 (இ மற்றும்சி) பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தாக்கல் செய்ய வேட்புமனுவில் தன்னிடம் ரூ.98 ஆயிரத்து 450-ம், தனது மனைவி சங்கீதாவிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் பணம் கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல் காரணமாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×