search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல்
    X

    உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல்

    ஊட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள். ஊட்டி சட்டமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் தேர்தல் பிரசாரம் செய்து விட்டு ஊட்டிக்கு வந்து கொண்டு இருந்தார். முதல்- அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு பின்னால் ஒரு கார் வந்தது. இந்த காரை ஊட்டி-குன்னூர் சாலை மைனலா சந்திப்பு பகுதியில் நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது காரில் ரூ.17 லட்சத்து 11 ஆயிரத்து 853 இருப்பது தெரியவந்தது. இந்த பணம் எல்லநள்ளியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட வங்கி செல்லான் இருந்தது. ஆனால் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த பணத்தை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் பார்வையிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரியிடம் தகவல் அறிக்கை வழங்கப்பட்டு, பின்னர் நீலகிரி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையில் ஊட்டியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தை தேர்தல் பார்வையாளர் கண்காணித்தார். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை(நேற்றைய நிலவரப்படி) 226 நபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 19 லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 155 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ரூ.2 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 240 விடுவிக்கப்பட்டு இருக்கிறது. 
    Next Story
    ×