search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டக்குப்பம் அருகே கல்லூரி பேராசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு
    X

    கோட்டக்குப்பம் அருகே கல்லூரி பேராசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு

    கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 6 பவுன் நகை மீட்கப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விந்தியன்தேவன். இவரது மனைவி அனந்தநாயகி என்ற ஹேம லதா (வயது 45). இவர் தாகூர் கலைக்கல்லூரியில் ஆங்கில துறை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 28-ந் தேதி பேராசிரியை ஹேமலதா காலாப்பட்டில் உள்ள பல்கலைக் கழக்கத்துக்கு சென்றிருந்தார்.

    பின்னர் அவர் ஸ்கூட்டியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். சின்ன முதலியார் சாவடியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பின்னால் 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் திடீரென்று ஹேமலதா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டியை வழிமறித்தனர். பின்பு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று ஹேமலதா கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்தான்.

    உடனே ஹேமலதா “திருடன்... திருடன்...” என்று சத்தம் போட்டார். அதற்குள் நகையை பறித்தவுடன் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஹேமலதா கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் நகையை பறித்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சின்னமுதலியார் சாவடியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி. கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சியை கொண்டும், பேராசிரியை ஹேமலதா கூறிய கொள்ளையர்களின் அடையாளங்களை கொண்டும். அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த மடப்பாக்கம் பகு தியை சேர்ந்த சர்ஜான் (வயது 20) மற்றும் அவரது கூட்டாளி என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. அங்கு பதுங்கி இருந்த சர்ஜானை மட்டும் போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் தப்பி ஓடி விட்டார்.

    கைதான சர்ஜானிடம் விசாரித்த போது அவன் பிரபல வழிப்பறி கொள்ளையன் என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சர்ஜானிடம் இருந்து 6 பவுன் நகை மீட்கப்பட்டது. தப்பி ஓடி விட்ட அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையன் சர்ஜானை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவனை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சர்ஜான் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×