search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
    X

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு இல்லாததால் பல பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் குடிப்பதற்கு மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒட்டப்பட்டி மற்றும் அரசு கலைக்கல்லூரி அருகே குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து இன்றும் தர்மபுரி - சேலம் செல்லக்கூடிய பைபாஸ் சாலையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    நாங்கள் வேப்பமரத்துக் கொட்டாய், மேட்டு கொட்டாய், பட்டாளம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் மேட்டு தெரு மற்றும் நேரு நகர் போன்ற பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் எங்கள் பகுதிக்கு வரக்கூடிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தற்போது வருவதில்லை. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உள்ளதால் போரிலும் தண்ணீர் வருவதில்லை. எங்கள் பகுதியில் இந்த குடிநீர் பிரச்சனை கடந்த 6 மாதமாக நீடித்து வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் குடிநீர் வந்து நான்கு நாட்களுக்கு மேல்ஆகிறது. இது குறித்து தடங்கம் ஊராட்சியில் புகார் செய்தோம். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    இதனைத் தொடர்ந்து நல்லம்பள்ளி தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் நல்லம்பள்ளி பி.டி.ஓ. கிருஷ்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் குடிநீர் வருவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

    பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×