search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை- சென்னை இடையே சிறப்பு ரெயில்
    X

    கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை- சென்னை இடையே சிறப்பு ரெயில்

    கூட்ட நெரிசலை தவிர்க்க கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    கோவை:

    தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 29-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

    தொழில் நகரமான கோவையில் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகளவு இருக்கும். இதை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கோவை- திருச்சி இடையே 06025 என்ற எண் கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஜூன் மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை மாதம் 2-ந் தேதிகளில் கோவையில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக காலை 5.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில்நிலையம் சென்றடைகிறது.

    பின்னர் இந்த சிறப்பு ரெயில் அங்கிருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக காலை 11.15 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. கோவையில் இருந்து சென்னை செல்பவர்களுக்கும், சென்னையில் இருந்து திருச்சி செல்பவர்களின் வசதிக்காகவும் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதேபோல் சென்னை சென்ட்ரல்- கோவை இடையே 06033 என்ற எண் கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஜூன் மாதம் 3, 10, 17 மற்றும் 24-ந் தேதிகளில் இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு கோவை வந்தடைகிறது.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு கடந்த 21-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×