search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறை, லால்குடியில் வாகன சோதனையில் ரூ.7¾ லட்சம் பறிமுதல்
    X

    மணப்பாறை, லால்குடியில் வாகன சோதனையில் ரூ.7¾ லட்சம் பறிமுதல்

    மணப்பாறை, லால்குடியில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சத்து 87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    மணப்பாறை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்லலாம், அதற்குமேல் பணம் கொண்டு சென்றால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று காலை தாசில்தார் சாந்தகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை காய்கனி மார்க்கெட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன பால்வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 920 இருந்தது.

    விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தனியார் பால் நிறுவன ஊழியர்கள் சென்னை தாம்பரம் பகுதியில் பால் விற்பனை செய்த வகையில் வசூலான பணம் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு மணப்பாறை தாசில்தார் சித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தொடர்ந்து அதே பறக்கும் படையினர் கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மொய்து என்பவரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், ஜாபர் என்பவரிடம் ரூ.3 லட்சமும் இருந்தது. விசாரணையில், இருவரும் மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்க வந்த வியாபாரிகள் என்பது தெரிய வந்தது. ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் பிள்ளையார்கோவில்பட்டியில் தேர்தல் அதிகாரி சற்குணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம், ரூ.97 ஆயிரத்து 550 இருந்தது. விசாரணையில், அவர் கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பைனான்ஸ் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப் பட்டது. மணப்பாறையில் நேற்று ஒரு நாளில் மட்டும் வாகன சோதனையின்போது 4 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 24 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டது.

    லால்குடி-சிறுதையூர் நால்ரோடு சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியாக திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி வந்த ஒரு காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 900 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவர், லால்குடியை சேர்ந்த அசோக்குமார் என்பதும், இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருவதும், தனது நிறுவனத்தில் வசூல் ஆன தொகையை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. 
    Next Story
    ×