search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனையம் அருகே மாதா ஆலயத்தில் 14 பவுன் நகை- உண்டியல் பணம் கொள்ளை
    X

    இனையம் அருகே மாதா ஆலயத்தில் 14 பவுன் நகை- உண்டியல் பணம் கொள்ளை

    இனையம் அருகே மாதா ஆலயத்தின் முன்பக்க கதவை உடைத்து 14 பவுன் நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமமான இனையத்தை அடுத்த சின்னத்துறையில் பெரியநாயகி மாதா ஆலயம் உள்ளது.

    பெரியநாயகி மாதா ஆலயத்தில் தற்போது விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஊழியர்கள் அங்கு வேலைபார்த்து வருகிறார்கள். ஆலயத்தின் உட்பகுதியிலும், வெளியிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ஆலயத்தில் இருந்த பெரியநாயகி மாதாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகள் மற்றும் ஆபரணங்கள் மாதா சிலையில் போடப்பட்டிருக்கும். இதனை ஊர் மக்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் அவ்வப்போது பார்த்து செல்வது வழக்கம்.

    ஆலயபணிகளை நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் பார்வையிட்டு வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் ஆலயத்திற்கு சென்றபோது, ஆலயத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ஆலய நிர்வாகிகள் ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்த போது, மாதா சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தது. சிலையில் மாலை, பொட்டு கம்மல், மோதிரம், வளையல் என மொத்தம் 14 பவுன் நகைகள் போடப்பட்டிருந்தது. அவை அனைத்தையும் காணவில்லை.

    மேலும் ஆலயத்தில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணமும் திருட்டுப்போய் இருந்தது. உண்டியலில் சுமார் ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

    ஆலயத்தில் மாதா சிலையில் போடப்பட்ட நகை மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றது பற்றி ஆலய நிர்வாகி ஜஸ்டின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் சென்றனர். அவர்கள் கொள்ளை நடந்த ஆலயத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது மர்மநபர் ஒருவரின் கைரேகை சிக்கியது. அதன் அடிப்படையில் ஆலயத்தில் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மண்டைக்காடு அருகே அழகன்பாறை கோவிலான் விளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் உள்பட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப்போய் இருந்தது.

    இதுபற்றி ராஜேந்திரன் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடியவர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×