search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த சக்திவேல்
    X
    தற்கொலை செய்த சக்திவேல்

    அவமானத்தால் தற்கொலை - வாலிபரை தாக்கிய 3 பெண்கள் கைது

    பவானி அருகே பெண்கள் தாக்கியதாக வாலிபர் தற்கொலை செய்ததும், பெண்கள் இன்று கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பானுமதி. இவரது மகன் சக்திவேல் (வயது 28).

    சாயப்பட்டறை தொழிலாளியான சக்திவேலுக்கு திருமணமாகி ஜோதிகா (22) என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜோதிகா பிரிந்து சென்று விட்டார். சக்திவேல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    சக்திவேலின் தாயார் பானுமதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்து கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தடுமாறினார்.

    மகளிர் சுய உதவி குழுவினரிடம் தனது தாயார் வாங்கிய கடனை நான் அடைக்கிறேன் என்று கூறினாராம். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிபடி அவராலும் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தடுமாறினார்.

    இந்த நிலையில் சக்திவேல் வீட்டுக்கு மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த அதே பகுதியை சேர்ந்த திலகவதி, அம்பிகா, கனகா ஆகிய 3 பேர் வந்தனர்.

    அவர்கள் சக்திவேலிடம் பணத்தை கொடுங்கள் என்று கேட்டனர். இது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. பிறகு அடி-தடியாகவும் மாறியது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    3 பெண்களும் சக்தி வேலை தாக்கியதாக கூறப்படுகிறது. கட்டையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அங்கு கூட்டம் கூடியது. பிறகு அங்கிருந்த 3 பெண்களும் சென்று விட்டனர். பெண்கள் தாக்கியதால் காயம் அடைந்த சக்திவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    தன்னை பெண்கள் அடித்து விட்டார்களே.. என்ற மன வேதனையில் இருந்த சக்திவேல் வி‌ஷம் குடித்தார்.

    உடனே அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    சக்திவேல் இறந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். காடையாம்பட்டி ரோட்டில் நேற்று மதியம் சாலை மறியல் நடத்தினர்.

    இவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சக்திவேல் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கூறினர்.

    நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் சாலை மறியலை கைவிட்டனர்.

    இந்த நிலையில் பவானி போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    சக்திவேலை தாக்கியதாக கூறப்படும் திலகவதி, அம்பிகா, கனகா ஆகிய 3 பேரையும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் இன்று அதிகாலை கைது செய்தார்.

    பிறகு 3 பேரும் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    பவானி அருகே பெண்கள் தாக்கியதாக வாலிபர் தற்கொலை செய்ததும், பெண்கள் இன்று கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    Next Story
    ×