search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூர் மையத்தில் ரூ.8 கோடிக்கு தேயிலைத்தூள் ஏலம்
    X

    குன்னூர் மையத்தில் ரூ.8 கோடிக்கு தேயிலைத்தூள் ஏலம்

    குன்னூர் மையத்தில் ரூ.8 கோடிக்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக விளங்குகிறது. இதனை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏலம் மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை விலைக்கு வாங்குகின்றனர். இதில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குன்னூர் மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடைபெறுகிறது.

    ஆனால் கடந்த வாரம் 22-ந் தேதி மட்டுமே ஏலம் நடைபெற்றது. 21-ந் தேதி ஹோலி பண்டிகை என்பதால், ஏலம் நடத்தப்படவில்லை. இந்த ஏலத்துக்கு 9 லட்சத்து 18 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. அதில் 5 லட்சத்து 99 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 19 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 7 லட்சத்து 82 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.7 கோடியே 95 லட்சம் ஆகும். இது 86 சதவீத விற்பனை. சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.270, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.264 என இருந்தது.

    சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.92 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.120 முதல் ரூ.130 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.92 முதல் ரூ.98 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.140 வரையும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.1 விலை குறைவு இருந்தது. அடுத்த ஏலம் வருகிற 28, 29-ந் தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு 9 லட்சத்து 80 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வருகிறது.
    Next Story
    ×