search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோதையாறு மேல்தங்கல் வாக்குச்சாவடியை தேர்தல் அதிகாரியும், கலெக்டரும் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி
    X
    கோதையாறு மேல்தங்கல் வாக்குச்சாவடியை தேர்தல் அதிகாரியும், கலெக்டரும் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி

    6 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 160 கிலோ மீட்டர் பயணம் செய்த அதிகாரிகள்

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் 6 வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக தேர்தல் அதிகாரிகள் 160 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர். #ParliamentaryElection
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் 6 வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக தேர்தல் அதிகாரிகள் 160 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியது உள்ளது.

    அந்த வாக்குச்சாவடி திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியின் முதல் வாக்குச்சாவடியாகும். இந்த வாக்குச்சாவடி கோதையாறு மேல்தங்கலில் அமைந்து உள்ளது.

    இங்குள்ள மின் நிலைய குடியிருப்பில் வசிக்கும் மின் ஊழியர்கள் 6 பேர் தங்கள் ஓட்டை பதிவு செய்வதற்கு வசதியாக இங்கு வாக்குச்சாடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு கீழ் கோதையாறில் இருந்து மலைப்பாதையில் செல்லும் இழுவை வண்டி உள்ளது. ஆனால் பத்மநாபபுரத்தில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இந்த இழுவை வண்டி மூலம் கோதையாறு மேல் தங்கலுக்கு பயணம் செய்வது மிகவும் கடினமான காரியம் ஆகும்.

    இதனால் தேர்தல் அலுவலர்கள் நாகர்கோவில், களக்காடு, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணி முத்தாறு, மாஞ்சோலை வழியாக 160 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த வாக்குச்சாவடிக்கு செல்லும் நிலை உள்ளது. அதேப்போல வாக்குப்பதிவு முடிந்ததும் இதே பாதையில் வாக்குப் பதிவு எந்திரங்களுடன் அதிகாரிகள் திரும்புவார்கள்.



    இந்த வாக்குச்சாவடிக்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியது இருப்பதால் வாக்குப்பதிவு எந்திரங்கள், அடையாள மை போன்ற பொருட்கள் அதிகாரிகள் மூலம் மற்ற வாக்குச்சாவடிகளை விட முன்கூட்டியே கொண்டு செல்லப்பட்டு விடும். அதேசமயம் தேர்தல் முடிந்த பிறகு இங்குள்ள வாக்குப்பதிவு எந்திரம் கடைசியாகத்தான் கொண்டுவந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரசாத் வடநேரே கோதையாறு மேல் தங்கல் வாக்குச்சாவடி அமைந்து உள்ள மின் ஊழியர் மனமகிழ்மன்ற கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடந்த சட்டசபை தேர்தலின் போது கோதையாறு மேல் தங்கல் வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு சாலை உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி வாக்குப்பதிவை புறக்கணித்தனர். இதனால் வாக்காளர்களை சந்தித்த கலெக்டர் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி அவர்களிடம் எடுத்துக்கூறினார். #ParliamentaryElection
    Next Story
    ×