search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
    X

    கடலூரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

    கடலூரில் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மோகினி பாலத்தில் இருந்து மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை வரைக்கும் சாலையின் இருபுறமும் வடிகால் வசதியுடன் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலையின் குறுக்கே உள்ள சிறு பாலங்களை அகற்றிவிட்டு அகலமான பாலம் அமைக்கப்படுகிறது. ஆனால் இந்த பணிகள் அரைகுறையான நிலையில் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    குறிப்பாக இம்பீரியல் சாலையில் இடை இடையே பள்ளம் தோண்டப்பட்டு சில இடங்களில் வடிகால்கள் அமைத்தும், சில இடங்களில் உள்ள பள்ளங்கள் குப்பை சேகரிப்பு கிடங்காகவும், கழிவுநீர் சேகரிப்பு நிலையமாகவும் இருப்பதை காண முடிகிறது. மேலும் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் பள்ளம் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அல்லது பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும் என்பது சாலை பாதுகாப்பு விதிமுறை ஆகும். ஆனால் இந்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் அவ்வப்போது சிறு விபத்துகள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று காலை சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. முல்லை கோ-ஆப்டெக்ஸ் சிக்னலை கடந்து வந்தபோது அங்குள்ள ஒரு கடை அருகே காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி வாகன ஓட்டிகள் வற்புறுத்தினர். இதையடுத்து டிரைவர் அந்த காரை நகர்த்தி டீ கடையின் அருகில் ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக சாலையோர வடிகால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுபற்றிய தகவல் அறிந்து கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டை ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது. 
    Next Story
    ×