search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக, திமுக மக்களை கண்டுகொள்ளவில்லை - கவுதமி
    X

    அதிமுக, திமுக மக்களை கண்டுகொள்ளவில்லை - கவுதமி

    ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியையும் மாறி மாறி குறை சொல்கிறார்களே தவிர மக்களை யாருமே கண்டுக்கொள்ளவில்லை என்று நடிகை கவுதமி கூறியுள்ளார். #Gautami
    சென்னை:

    நடிகை கவுதமி இணைய தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறி இருப்பதாவது:-

    கேள்வி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து உங்கள் கருத்து?

    பதில்: மனிதர்களால் இத்தகைய செயல்களை எப்படி செய்ய முடியும் என்று அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வாழ்நாள் முழுக்க பாதிக்கலாம். அந்த வலிதான் மிகக்கொடியது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் நம்பிக்கையுடன் மீண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    கேள்வி:- பா.ஜனதாவில் இணைந்த நீங்கள் அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் இருப்பது ஏன்?

    பதில்:- அரசியல் என் முழுநேர தொழில் கிடையாது. மற்ற பல பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்துகிறேன். அதற்கே நேரம் சரியா இருக்கிறது. அதனால்தான் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை.

    கேள்வி:- மோடி ஆட்சி குறித்து உங்கள் கருத்து?

    பதில்: என் பவுண்டே‌ஷன் பணிகள் குறித்துப் பேசவும் மேற்கொண்டு நல்ல யோசனைகளைப் பெறவும் பிரதமரை 2016-ல் சந்தித்தேன். ஆனால் அரசியல் குறித்து அப்போது பேசவில்லை. பிரதமராக மோடி நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார். மத்திய அரசு செய்த பல நல்ல திட்டங்கள் மக்கள் மத்தியில் சரியாக எடுத்துக் கூறப்படவில்லை. அது மக்களுக்கு முழுமையாகத் தெரிந்தால், பா.ஜனதாவின் பலம் இன்னும் கூடும்.

    கேள்வி:- பா.ஜனதா- அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி பற்றி?

    பதில்:- அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது. இக்கூட்டணி, பல காரணங்களை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து கருத்துச் சொல்ல விருப்பமில்லை.

    கேள்வி:- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் மாற்றங்கள்?

    பதில்:- தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. ஆனால், ஓர் அரசின் ஆட்சி முடிவடையும் போதுதான் அவர்களின் ஆட்சித்திறனை மதிப்பிடவேண்டும் என்பது என் கருத்து.

    அதனால், தற்போதைய ஆட்சி முடிவடையும் போது என் கருத்தை வெளிப்படையாக சொல்கிறேன். ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியையும் மாறி மாறி குற்றம் சாட்டிகிட்டே இருக்கிறார்கள். ஆனால் மக்களை யாருமே பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என்று எனக்கு வருத்தம் இருக்கிறது.



    அரசியல் தலைவராகவும் சவால்களை கடந்து சாதித்த பெண்ணாகவும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும். ஆளுமையுடன் வாழ்ந்த அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் எனக்கு அதிக வருத்தமும் சந்தேகமும் உண்டு. எனக்கு மட்டும் அல்ல கோடிக்கணக்கான மக்களுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது’’ அதற்கான விடை தெரிந்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Gautami #ADMK #DMK
    Next Story
    ×