search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
    X

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. #LokSabhaElections2019 #ParliamentElections
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.



    வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.

    வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26-ம் எண் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு உள்ளன. இதற்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

    அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் 5 ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். (முன்பு ஒரு ஆண்டு வருமான வரிக்கணக்கு). இந்து கூட்டுக்குடும்ப சொத்துக்கள், வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் ஆகியவற்றையும் சேர்த்து அந்த விண்ணப்பத்தில் காட்ட வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும்.

    அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் 3 முறை பிரபல நாளிதழ்கள், டி.வி. சேனல்களில் தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் விரைவில் தமிழகம் வர இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

    இதற்கிடையே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிடுகின்றன. #LokSabhaElections2019 #ParliamentElections #TamilnaduByElection #Nomination

    Next Story
    ×