search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்த இணையதளம் வாயிலாக அனுமதி பெறலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
    X

    அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்த இணையதளம் வாயிலாக அனுமதி பெறலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

    நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்த இணையதளம் வாயிலாக அனுமதி பெறலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் ஆணையத்தின் ஸ்மார்ட் போன் செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவது குறித்த அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும், பிரசார வாகன பயன்பாடு உள்ளி்ட்ட பல்வேறு அனுமதிகளை பெற ஒற்றை சாளர முறையில் சுவிதா என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. www.suvidha.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்துவதற்காகவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும், பிரசார வாகன பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர், காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் பரிசீலனை செய்து அனுமதியினை அந்த இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளது.

    மேலும், வாக்காளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களை தெரிவிக்க சி-விஜில் என்ற ஸ்மார்ட்போன் செயலியினையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்து உள்ளது. இந்த செயலியை தேவைப்படுபவர்கள் பதிவிறக்கம் செய்து தங்களது ஸ்மார்ட் போனில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேர்தல் விதிமுறைகள் குறித்து தாங்கள் ஏதேனும் விதிமீறல்களை பார்வையிட்டால் அதனை குறிப்பிட்ட செயலியில் உள்ள பொத்தானை அழுத்தி புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ நேரடியாக பதிவு செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த புகாரானது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த இடத்தின் ழுழு விவரத்தோடு வந்து சேரும். அந்த புகாரானது சம்பந்தப்பட்ட பகுதியின் பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று புகாரின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சி வகுப்பில் தேசிய தகவல் மைய அலுவலர் செல்வகுமார், தேர்தல் கணினி அலுவலர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிராந்தி குமார், மணிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×