search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி, மதுரை மாவட்டத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    தேனி, மதுரை மாவட்டத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் தேனி, மதுரை மாவட்டத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால் பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடை சமாளிப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் இந்த நிலை தொடர்ந்தால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 113.85 அடியாக குறைந்துள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்துள்ள நிலையில் 3 கன அடி நீர் மட்டுமே வருகிறது.

    அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

    இதனால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர் நிலைகளும் வறண்டு போய் உள்ளன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீர் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வைகை அணை நீர் மட்டம் 44.93 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 95.94 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×