search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #pollachiissue

    தஞ்சாவூர்:

    பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்கள் சீரழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி முன்பு அமர்ந்து இந்திய மாணவர் சங்க கிளை செயலாளர் சோபியா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், குற்றவாளிகள் பின்புலத்தில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியே கூறிய கோவை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் 2500 மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சையில் உள்ள கோர்ட்டு முன்பு வக்கீல்கள் திரண்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×