search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டியில் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது: தாய்-மகன் உயிர் தப்பினர்
    X

    கும்மிடிப்பூண்டியில் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது: தாய்-மகன் உயிர் தப்பினர்

    கும்மிடிப்பூண்டியில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பிடித்தது எரிந்தது. இதில் தாய், மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பஜாரில் 3 மாடி கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் 3 வீடுகள் என்ற முறையே மொத்தம் 9 வீடுகள் உள்ளன.

    தரை தளத்தில் உள்ள முதல் வீட்டில் பிரேம் குமார், அவரது மனைவி மணிமேகலை(30) மற்றும் அவரது மகன் வருண்(4) ஆகியோர் வசித்து வருகிறார்கள். பக்கத்தில் அருகருகே இருந்த 2 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததால் அவை பூட்டப்பட்டு கிடந்தன.

    இந்த நிலையில் நேற்று மாலை கும்மிடிப்பூண்டியில் மின் தடை ஏற்பட்டு மீண்டும் மாலை 6 மணியளவில் மின்சப்ளை வழங்கப்பட்டது.

    வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வருண் மீண்டும் மின்சப்ளை வந்ததால் வீட்டிற்கு சென்று தனது தாயை கூப்பிட்டு கதவை தட்டி உள்ளான். அப்போது வெளியே வந்த மணிமேகலை அருகே உள்ள வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர் தனது மகனுடன் அங்கிருந்து வெளியேறி சாலைக்கு வந்தார். மேலும் அந்த வளாகத்தில் இருந்த அனை வரையும் உஷார்படுத்தினார். அவர்கள் அருகே உள்ள மற்றொரு குடியிருப்பு வளாகத்திற்கு மேல் மாடி வழியே இடம் மாறி சென்றனர்.

    அதற்குள் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி பஜார் முழுவதும் மின் சப்ளை உடனடியாக துண்டிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் குறுகலான அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் பிடித்த தீயை அணைத்தனர்.

    சிறுவன் வருண் மின்சாரம் வந்ததுமே வீட்டிற்கு சென்றதால் வீட்டுக்குள் இருந்த அவனது தாய் மணிமேகலை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்சப்ளை வந்தவுடன் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

    சம்பவ இடத்தில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×