search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை 23-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் - மதுரை பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை 23-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் - மதுரை பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஏப்ரல் 18-ந் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடப்பதால் தேர்தலை 23-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என மதுரை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மதுரை:

    தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் பகுதிகள் அடங்கி உள்ளன.

    உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது. அன்றுதான் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. தேரோட்டம் முடிந்த மறு நாள் 19-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியிலும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரை வைகை ஆற்றில் திரளுவார்கள்.

    தேரோட்டம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும். எனவே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    டாக்டர் இஸ்மாயில் (கல்லூரி முதல்வர்):- நாட்டின் 17-வது பாராளுமன்றம் அமைப்பதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஏப்ரல் 18-ந்தேதி தென் மாவட்ட மக்களே மகிழ்ச்சி பொங்க மதுரையில் திர ளும் மகத்தான சித்திரை திருவிழா காலமாகும். உலக மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைகின்ற மீனாட்சி அம்மன் கோவில் தேரோட் டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகிய நிகழ்ச்சிகளை காண லட்சக்கணக்கானோர் மதுரையில் கூடுவார்கள்.

    அன்றைய தினம் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது. எனவே 5 நாட்கள் கழித்து 3-வது கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 23-ந்தேதி தமிழகத்தில் தேர்தலை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

    சுப்புராம் (பெட்கிராட் தொண்டு நிறுவன தாளாளர்):- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி தான். ஆனாலும் மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெறும் காலத்தில் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

    எனவே ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் தேதியை மாற்றி 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தால் நன்றாக இருக்கும். இதனை மாநில தேர்தல் ஆணையம் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். லட்சக்கணக்கானோர் சித்திரை திருவிழாவில் கூடுகின்ற நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது. எனவே இதனை உடனடியாக மாற்றி உத்தரவிட வேண்டும்.

    எஸ்.ஜி.மணிகண்டன் (தனியார் நிறுவன ஊழியர்):- பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயக கடமை ஆற்றுவதா? அல்லது சாமி கும்பிட செல்வதா? என்ற குழப்பமான மனநிலை ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு தேர்தல் ஆணையம் இதுபோன்ற வி‌ஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் கூடும் திருவிழாவை மாற்ற முடியாது. எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றார்.

    கீர்த்தி (கல்லூரி மாணவி):- சித்திரை திருவிழாவின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேதியை முடிவு செய்யும் முன் மாநில தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்டிருந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டு இருக்காது.

    திருவிழாவின்போது வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இதனால் வாக்கு சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    அருண்குமார் (வங்கி ஊழியர்):- சித்திரை திருவிழாவின் போது வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமம் பார்க்காமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அதற்காக தேர்தல் தேதியை மாற்றச் சொல்வது என்பது தவறான முன் உதாரணம்.

    தேர்தல் தேதியை மாற்றினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருவிழா மற்றும் பல்வேறு காரணங்களை கூறி மாற்ற வேண்டிய நிலைமை வரும் என்றார்.

    மூகாம்பிகை (எஸ்.ஆலங்குளம்):-மதுரை சித்திரை திருவிழா பாரம்பரிய திருவிழா. மதுரையை பூர்வீகமாக கொண்ட அனைவரும் திரு விழாவுக்கு வருவார்கள். இதனை தேர்தல் கமி‌ஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கலாசாரமா? தேர்தலா? என்று கேட்டால், கலாசாரம் தான் முக்கியம். பொதுத்தேர்தல் என்பது பொது மக்களுக்கான தேர்தல்தான். தேர்தல் பற்றி பொதுமக்கள் கவனமாக இருந்தால்தான் அது வெற்றி பெறும். இந்த நேரத்தில் மக்கள் திருவிழாவில் பங்கேற்பதால் கவனம் சிதற வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும். #tamilnews

    Next Story
    ×