search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி
    X

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் - பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalanisamy #PMModi
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மிகச் சிறந்த பொதுச்சேவையை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை எம்.ஜி.ஆருக்கு மத்திய அரசு 1988-ம் ஆண்டு வழங்கியது.

    தயாள குணம், பெருந்தன்மை, கம்பீரமான தலைமைத்துவம், மாநிலத்தின் உரிமைகளுக்காக உறுதியாக போரிடும் போர்க்குணம் போன்ற நற்குணங்களுக்காக உலகத் தமிழர்கள் மற்றும் தமிழக மக்களால் தொடர்ந்து நினைவுகூரப்படுபவர் எம்.ஜி.ஆர். தேச அளவில் பின்பற்றப்படும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதால், தேச மற்றும் சர்வதேச அளவில் மக்களின் நினைவில் போற்றப்படும் எம்.ஜி.ஆர். வசீகரிக்கக்கூடிய மற்றும் புகழ்மிக்க முதல்- அமைச்சராக திகழ்ந்தார்.

    அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில், அவரது பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம் என்ற பெயரை சூட்டவேண்டும் என்று 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி அமைச்சரவையில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.



    அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடந்த 6-ந் தேதி வண்டலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டீர்கள். இதற்காக தமிழக மக்களின் சார்பில் எனது இதயப்பூர்வமான நன்றியை கூறிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalanisamy #PMModi
    Next Story
    ×