search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் தினத்தையொட்டி மிதவை கப்பல் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் கமாண்டர்கள்
    X

    மகளிர் தினத்தையொட்டி மிதவை கப்பல் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் கமாண்டர்கள்

    மகளிர் தினத்தையொட்டி கடலோர காவல்படை பெண் கமாண்டர்கள் 2 பேர் மிதவை கப்பல் மூலம் ராமேசுவரம் மண்டபத்தில் இருந்து சென்னை வரை பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். #WomensDay
    சென்னை:

    நாடு முழுவதும் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலோர காவல்படையின் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய மிதவை கப்பலை (ஹோவர் கிராப்ட்-197) ஓட்டும் முதல் பெண் கமாண்டர்களான சிரின் சந்திரன், அனுராதா சுகுலா ஆகியோரை கவுரவிக்க திட்டமிட்டனர்.

    அதன்படி, மிதவை கப்பலை ராமேசுவரம் மண்டபம் பகுதியில் இருந்து சென்னைக்கு (240 கடல் மைல் தூரம்) அந்த 2 பெண் கமாண்டர்கள், மாலுமிகளுடன் நேற்று இயக்கி வந்தனர். இதுதான் அவர்கள் தொலைதூரத்துக்கு இயக்கி வந்த முதல் பயண அனுபவம் ஆகும். இந்த பயணத்தில் அவர்கள் கடலோர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்து இருக்கின்றனர்.

    கடந்த 6-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட இந்த மிதவை கப்பல், நேற்று முன்தினம் சென்னை வந்தடைய இருந்தது. ஆனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால், ஒரு நாள் தாமதமாக நேற்று சென்னை வந்தடைந்தது.

    மகளிர் தினத்தையொட்டி கடலோர காவல்படையின் கம்பீர உடையணிந்து மிதவை கப்பலை இயக்கி வந்த 2 பெண் கமாண்டர்களை கடலோர காவல்படை ஐ.ஜி. பரமேஸ் வரவேற்றார். அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், முதல் பெண் கமாண்டர்களான அவர் களை வாழ்த்தியும் பேசினார்.

    2 பெண் கமாண்டர்களில், சிரின் சந்திரன் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், கோவையில் தான் தன்னுடைய கல்லூரி படிப்பை நிறைவு செய்து இருக்கிறார். தமிழில் சரளமாக பேசுகிறார். என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்து இருக்கும் சிரின் சந்திரனின் லட்சியம் ராணுவத்தில் சேருவது தான்.

    அவருடைய தந்தையும் கடலோர காவல்படையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-ம் ஆண்டு கடலோர காவல்படையில் சிரின் சந்திரன் பணியில் சேர்ந்தார். மிதவை கப்பலை இயக்க பெண் கமாண்டர்களுக்கு 2016-ம் ஆண்டு வாய்ப்பு வந்தபோது, அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது சிரின் சந்திரன் கமாண்டராக வலம் வருகிறார்.

    ஆண்களுக்கு பெண் நிகரில்லை என்று கூறும் அவர், சீருடை அணிந்த பிறகு பணியில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருக்காது என்றும் தெரிவித்தார். இதுகுறித்து சிரின் சந்திரன் மேலும் நிருபர்களிடம் கூறுகையில், “பெண்களால் முடியாத காரியம் எதுவுமில்லை. மனதைரியம் என்பது பெண்களுக்கு மிகவும் அவசியம். அது இருந்தால் எதையும் சாதிக்கலாம். கடலோர காவல்படையில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தி, இதுபோன்ற வேலைவாய்ப்புகளில் எளிதாக வரலாம். ஒரு பெண் படித்தால், அந்த குடும்பம் முன்னேற்றம் அடையும்” என்றார்.

    சிரின் சந்திரன் தன்னுடன் பணியாற்றும் சக கடலோர காவல் படை அதிகாரியை காதலித்து கரம்பிடித்து இருக்கிறார். நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) அவர்களுக்கு திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது.

    அதை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்த சிரின் சந்திரன், தன்னுடைய பணிக்கான முதல் அழைப்பு வந்ததும், பணிதான் முக்கியம் என்று புறப்பட்டு வந்திருக்கிறார். இதை அறிந்த சக அதிகாரிகள், மாலுமிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    மீண்டும் ராமேசுவரம் மண்டபத்துக்கு செல்வதற்கான அடுத்த அறிவிப்புக்கு 2 பெண் கமாண்டர்களும் காத்து இருக்கின்றனர். #WomensDay
    Next Story
    ×