search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி இன்று சென்னை வருகை - கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்
    X

    மோடி இன்று சென்னை வருகை - கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்

    வண்டலூர் அருகே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில், அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். #LSPolls #PMModi #ADMK #PMK #BJP
    சென்னை:

    நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வும் இந்த கூட்டணியுடன் இன்று (புதன்கிழமை) இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.



    சென்னை விமான நிலையத்துக்கு மாலை 3.30 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகிறார். அங்கு ஹெலிகாப்டர் இறங்குவதற்காக பிரத்யேக தளம் அமைக்கப்பட்டுள்ளது. சரியாக மாலை 4 மணிக்கு மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.

    முதலில், அரசு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதாவது, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கிறார்.

    இந்த எரிவாயு முனையத்தின் மூலம் 1,244 கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணூரில் இருந்து மணலி, திருவள்ளூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளுக்கு ஒரு குழாய் மூலமும், ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு ஒரு குழாய் மூலமும் எரிவாயு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

    இதேபோல், தெற்கு ரெயில்வே சார்பில் ரூ.321.64 கோடி செலவில், ஈரோடு, கரூர், திருச்சி இடையே 142 கிலோ மீட்டர் தூரத்துக்கும், சேலம், கரூர், திண்டுக்கல் இடையே 158 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதைகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 2 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதுதவிர, சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையையும் அவர் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    அதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள மேடையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். அவரைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோரும் தொண்டர்கள் மத்தியில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாலை 5.30 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பொதுக்கூட்டம் நடை பெறும் மைதானம் 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு சொந்தமானது. பொதுக்கூட்டத்துக்கு அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    நேற்று மாலை பொதுக் கூட்ட மேடையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டனர். அங்கு வரும் தொண்டர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் கேட்டறிந்தனர்.

    இன்று காலை தே.மு.தி.க. வுடனான கூட்டணி பேச்சு வார்த்தையை அ.தி.மு.க. சுமுகமாக முடிக்கும் என்று தெரிகிறது. எனவே, பொதுக்கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. 
    Next Story
    ×