search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி தினகரன் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்
    X

    இரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி தினகரன் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்

    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார். #TwoLeaves #TTVDhinakaran #SC
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 20 பேருடன் தனியாக பிரிந்த சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டதும் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான அவர் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தன் வசப்படுத்த வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் அவருக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இரட்டை சின்னத்தை கொடுத்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

    சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் காங்கிரஸ் கட்சி தலைவரும், மூத்த வக்கீலுமான கபில்சிபில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி விட்டதால் இரட்டை இலை சின்னத்தை அவர்கள் உரிமை கொண்டாட இயலாது என்றார்.

    கபில்சிபிலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதாடினார். அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.தான் உண்மையான அ.தி.மு.க. என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

    இந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை வழங்கி இருப்பதாக வாதாடினார். கடந்த மாதம் 8-ந்தேதி வக்கீல்கள் வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.



    கடந்த 28-ந்தேதி இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அப்போது எடப்பாடி பழனிசாமி-ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது.

    இரட்டை இலை சின்னத்தை உரிமை கொண்டாட டி.டி.வி.தினகரனுக்கு உரிமை இல்லை என்றும் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் தினகரனும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தனி சுயேட்சை சின்னங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை உரிமை கொண்டாடி டி.டி.வி.தினகரன் மீண்டும் கோர்ட்டை நாடி உள்ளார்.

    அவர் சார்பில் இன்று சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “தேர்தல் ஆணையம் அரசியல் மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. #TwoLeaves #TTVDhinakaran #SC
    Next Story
    ×