search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இன்சுலின் மருந்து தட்டுப்பாட்டால் நோயாளிகள் பாதிப்பு
    X

    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இன்சுலின் மருந்து தட்டுப்பாட்டால் நோயாளிகள் பாதிப்பு

    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 3 வாரமாக இன்சுலின் மருந்து வழங்கப்படாததால் நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்தநிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் பெரும்பாலானவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கி, இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளை வழங்குகின்றனர்.

    கடந்த 3 வாரமாக நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து வழங்கப்படவில்லை. இதனால் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் மருந்து செலுத்தாததால் மேலும் அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இன்சுலின் மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் சரியாக பதில் அளிப்பதில்லை என்று புகார் கூறுகின்றனர்.

    இதனால் நோயாளிகள் வேறு வழியில்லாமல் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருந்து கடைகளில் 300ரூபாய் கொடுத்து இன்சுலின் மருந்து வாங்கி உடலில் செலுத்தி வருகின்றனர். அந்த மருந்தை 15 நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பிறகு மீண்டும் மருந்து வாங்க வேண்டும். இதன் காரணமாக சம்பளத்தில் ஒரு தொகையை மருந்துக்கு என்று ஒதுக்க வேண்டியது உள்ளது. மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க தனியாக டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. பொது மருத்துவர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்சுலின் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், சர்க்கரை நோய் நிபுணரை பணியில் அமர்த்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×