search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் விமானப்படை சிறப்பாக செயல்பட்டது- ஜனாதிபதி பேச்சு
    X

    பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் விமானப்படை சிறப்பாக செயல்பட்டது- ஜனாதிபதி பேச்சு

    எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானபடை வீரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமை பட பேசினார். #RamNathKovind #IAF
    கோவை:

    கோவை அருகே உள்ள சூலூரில் விமான படை தளம் உள்ளது. இந்த தளத்தின் 5-வது அணி பழுது நீக்கும் மையம் மற்றும் தெலுங்கானாவில்உள்ள ஹக்கிம் பேட் விமான படை தளம் ஆகியவற்றுக்கு சிறந்த நீண்ட கால சேவைக்கான விருது வழங்கும் விழா சூலூர் விமான படை தளத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு விருது வழங்கினார். விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். விருது வழங்க வந்த ஜனாதிபதிக்கு 3 ஹெலிகாப்டரில் தேசிய கொடி பறக்க விட்ட படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    20 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து பறந்த படி விமான படை வீரர்கள் பாரசூட் மூலம்  குதித்து சாகச நிகழ்ச்சி நடத்தினார்கள். மேலும் தேஜா, சாரங்க், அவுரங், டோர்னியர், ஏ.என்.-32, எம்.ஐ.-17 போன்ற விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    போர் விமானங்களின் சாகசம் நடைபெற்றது. விமானப்படை வீரர்களின் துப்பாக்கி சாகசமும் நடைபெற்றது. இதனை ஜனாதி பதி ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். முன்னதாக விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனை ஜனாதிபதி ஏற்று கொண்டார்.



    விருதுகளை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீரர்கள் மத்தியில் பேசியதாவது:-

    இந்த இரு அணிகளுக்கும்  விருதுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். விமான படையில் இரு அணிகளும்  சிறப்பான சேவை புரிந்து இருக்கிறது. கடந்த 1975-ல் நடைபெற்ற போரில் ஹக்கிம்பேட் படைப்பிரிவு சிறப்பாக செயல்பட்டது. ஹக்கிம் பேட் விமான படை தளத்தில் 1975 முதல் ஹெலிகாப்டரில் பெண் பைலட்டுகளுக்கும் 2016 போர் விமானங்களிலும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சூலூர் விமானப்படை 30 ஆண்டுகளுக்கும் மேலாக  வாகன பழுதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய விமானப்படையில் நவீன காலத்திற்கு ஏற்ப தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா அமைதியை விரும்பினாலும் தேவைப்படும் சமயத்தில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விமான படை உறுதியாக இருக்கிறது. சூழ்நிலை வரும் போது அதற்கு தகுந்த படி இந்திய விமான படை செயல்படும்.

    சமீபத்தில் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானபடை வீரமாகவும்,  சிறப்பாகவும் செயல்பட்டது. பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் விமானப்படையின் பணி மகத்தானது. இந்திய விமான படை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது

    இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பேசினார்.



    இதனை தொடர்ந்து இரு அணிகளின் 25 ஆண்டு கால சாதனைகள் குறித்த கையேட்டை  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.

    இதில் ஜனாதிபதி மனைவி சபிதா கோவிந்த், தலைமை விமானப்படை அதிகாரி வீரேந்திரசிங் தனுவா, தென்னிந்திய விமானப்படை தளபதி சுரேஷ், கலெக்டர் ராஜா மணி, ஈஷா யோகா மைய  நிறுவனர் சத்குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விருது வழங்கும் விழா முடிந்ததும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கோவை வந்தார்.  அதன் பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்தார். இன்று மாலை ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார்.
    ஜனாதிபதியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். இன்று இரவு கோவையில் தங்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #RamNathKovind #IAF
    Next Story
    ×