search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்- ஸ்டாலின்
    X

    திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்- ஸ்டாலின்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #JayalalithaaDeathProbe
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகூட்டுடன் காடு கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை, சாலை வசதிகள் செய்யப்படவில்லை. ரே‌ஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்களை கூறினர். அவற்றை மு.க.ஸ்டாலின் குறிப்பெடுத்து கொண்டார்.

    மேலும் அங்கு பங்கேற்ற பெண்கள் வங்கியில் கடன் கேட்டால் அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள். ஏராளமான பெண்கள் மு.க.ஸ்டாலினிடம் குறைகளை எடுத்து கூறினர்.

    தி.மு.க. சார்பில் எல்லா மாவட்டங்களிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். நான் கலந்து கொள்ளும் 20-வது கூட்டம் இதுவாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் குடிநீர் வசதி, ரே‌ஷன் கடை பிரச்சனை, சாலை வசதிகள் குறித்து புகார் கூறினார்கள். இதற்கெல்லாம் காரணம் உள்ளாட்சி நிர்வாகம் இல்லாதது தான். உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் இந்த குறைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

    உள்ளாட்சி நிர்வாகம் அமையாததால் அரசின் திட்டப்பணிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த ஆட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த விரும்பவில்லை. தி.மு.க. ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.

    இந்த கிராமத்தில் நடந்த கூட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பங்கேற்றுள்ளீர்கள். உங்கள் நம்பிக்கை எனக்கு புரிகிறது. அதற்கேற்றார் போல் நாங்கள் செயல்படுவோம். உங்களது குறைகளை நிறைவேற்ற மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்.

    இதைத்தொடர்ந்து முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் முந்தைய தி.மு.க. ஆட்சியை போல் சுழல் நிதி வழங்கப்படும். தற்போதைய ஆட்சியில் கட்சி பாகுபாடு பார்த்து முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு அனைத்து முதியோருக்கும் முறையாக உதவித்தொகை வழங்கப்படும்.


    முதுமை காரணமாக கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் முதல்- அமைச்சராக இல்லாத போதும் தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் அவரது உடல் நிலை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது நிலையை பற்றி யாரும் உண்மையை கூறவில்லை.

    ரூ.1 கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டதாக தகவல் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரணை கமி‌ஷன் நடத்தப்பட்டு வருகிறது. அது முறையாக நடக்கவில்லை. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன என்று நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

    மேலும் கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் அங்குள்ள ஊழியர் உள்பட 5 பேர் மர்மமாக இறந்துள்ளனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஊழல், லஞ்சத்தை தாண்டி கொலை, கொள்ளையிலும் அ.தி.மு.க. அரசுக்கு தொடர்பு உள்ளது. இதற்கு மத்திய அரசு துணை போகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த தீர்ப்பு வழங்கி தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin #JayalalithaaDeathProbe
    Next Story
    ×