search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவினாசியில் 28ந்தேதி விழா: அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்
    X

    அவினாசியில் 28ந்தேதி விழா: அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 28-ந்தேதி நடைபெற உள்ள விழாவில் அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். #AthikadavuAvinashiProject
    அவினாசி:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதார திட்டமான அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டி கடந்த 60 ஆண்டுகளாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவிநாசி புதிய பஸ் நிலையம் எதிரில் போராட்டக் குழுவினர் தொடர்ந்து 12 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதன் பலனாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இத்திட்டத்தின் ஆய்வு பணிக்காக ரூ.3.27 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அலுவலகம் ஈரோடு மற்றும் அவினாசியில் திறக்கப்பட்டது. பின்னர் ரூ.1,532 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்காக வருகிற 28-ந் தேதி அவிநாசியில் அத்திக்கடவு திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. காலை 9 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் பிரபாகரன், அவிநாசி தாசில்தார் வாணிலட்சுமி, ஜெகதாம்பாள், அவிநாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி, அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் வேலுசாமி, நகர செயலாளர் ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெகதீசன், ஜெயபால், ராஜேந்திரன், மூர்த்தி, தனபால், சன்முகம், உள்ளிட்ட பலர் அவிநாசி ஆட்டையாம் பாளையம், தேவராயன் பாளையம், அவிநாசி அரசு கலைக் கல்லூரி வளாகம், பழங்கரையை அடுத்த தேவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சிக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், திட்டத்திற்கான பணிகள் அடுத்தடுத்து நடந்து வருவது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்திட்டத்தினால் 843 ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குட்டைகள் நிரம்பும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்து வளரும். 50 லட்சம் மக்கள் பயன்பெறுவர், கிராமங்கள் பசுமை பெறும் என்றனர். #AthikadavuAvinashiProject
    Next Story
    ×