search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
    X

    எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    பாராளுமன்ற தேர்தல் எதிரிகளை ஓட, ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Edappadipalaniswami #ADMK #PMK
    திண்டிவனம்:

    அ.தி.மு.க.-பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தமானது. இதையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார்.

    பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவிலேயே நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜனதா கட்சி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் நமது கூட்டணியில் சேர இருக்கின்றன.

    ஜெயலலிதா இருந்த காலத்தில், அவர் நிறுத்தியிருந்த வேட்பாளர்களை எப்படி வெற்றிபெறச்செய்தீர்களோ, அதுபோல நாம் நின்றாலும் சரி, நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நின்றாலும் சரி, இரவு பகல் பாராமல் உழைத்து அவர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    அவ்வாறு வெற்றி பெறச்செய்தால் தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வலுவாக இருக்கும். தமிழகம் வளமாக இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றாலும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்கள் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு சென்றால் நமது தேவையை பூர்த்தி செய்ய முடியும். தமிழகத்தில் தேவையான திட்டங்களை பாராளுமன்றத்தில் கேட்டு வளமான தமிழகத்தை உருவாக்கலாம்.

    எனவே நமது கட்சி வேட்பாளர், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இந்த தேர்தல் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது இயக்கத்தின் மீது எத்தனை பேர் பழிசுமத்துகிறார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட தொடங்கியபோது எத்தனை வழக்குகள் தொடர்ந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

    வஞ்சக குணம்படைத்த, தீய சக்தி கொண்ட தி.மு.க.வை வேறோடு அகற்ற வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடக்கின்ற முதல் பாராளுமன்ற பொதுத்தேர்தல். இது எதிரிகளை ஓட, ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த தேர்தல் மூலமாக ஜெயலலிதா செய்த நன்மைகளை கிராமங்கள், பட்டிதொட்டிகளில் எடுத்துக்கூற வேண்டும். ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்குகின்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளது. இதனை தமிழகத்தில் நிரூபித்து காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami #ADMK #PMK
    Next Story
    ×