search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம் - கமல் ஹாசன்
    X

    தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம் - கமல் ஹாசன்

    தேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். #Kamalhassan

    திருவாரூர்:

    திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், செயற்குழு உறுப்பினருமான சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண்(திருவாரூர் தெற்கு), செய்யது அனாஸ்(நாகை தெற்கு), சதாசிவம்(தஞ்சை தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயற்குழு உறுப்பினர்கள் நடிகை பிரியா ராஜ்குமார், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் நல்லவர்களை உருவாக்கியுள்ளது. அதுபோல் கெட்டவர்களை உருவாக்கியுள்ளது. வாரிசு அரசியலை உருவாக்கித் தந்ததும் இந்த திருவாருர். எனவே குடும்ப அரசியலை, வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே திருவாரூரில் இந்த கூட்டத்தை நடத்தி உள்ளோம்.

    இன்றைக்கு பலர் மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக கூறுகிறார்கள். அது மெகா கூட்டணி தானா என்பதை இங்கிருக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இங்கு வந்திருக்கக் கூடிய கூட்டம் பிரியாணி பொட்டலத்திற்கும் குவார்ட்டர் பாட்டிலுக்கும் வந்ததல்ல. அதுபோல காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட மாட்டோம் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    கஜா புயலுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க நிதி இல்லை என்றவர்கள் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் இலவசம் என்கிறார்கள். இப்பொழுது எங்கிருந்து பணம் வந்தது. ஆபத்துக்கு உதவாத அந்த பணம் நமக்கு எதற்கு? இன்றைக்கு 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாக சொல்கிறார்கள். இது உண்மை என்று ஒத்துக் கொண்டால், 60 லட்சம் குடும்பங்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வைத்திருப்பது யாருடைய குற்றம்.

    60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளுவது என்றால் அதற்கு 30 ஆண்டு காலம் பிடித்திருக்கும். அப்படி என்றால் இந்த இரண்டு கட்சிகளுமே மக்களை வறுமைக்கோட்டில் கீழே தள்ளுவதில் தான் குறியாக இருந்து இருக்கிறது. இப்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த இரண்டு கட்சிகளையும் கீழே தள்ள வேண்டும் என்பதுதான். அதைத்தான் மக்கள் நீதி மையம் செய்து கொண்டிருக்கிறது.

    நாம் தனித்து போட்டியிடுவது நல்லதல்ல என்று சிலர் திடீர் அக்கறை காட்டுகிறார்கள். நாங்கள் எங்களது கொள்கையில் தெளிவாக இருக்கிறோம்.

    இந்திய நாட்டின் அரசியலில் தமிழரின் பங்கு இருக்க வேண்டும். பிரதமர் யார் என்பதை காட்டும் அடையாளமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்காகத்தான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க உள்ளோம்.

    அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் களமிறங்கியுள்ளோம். என்னைப் பார்த்து டுவிட்டரில் அரசியல் நடத்துகிறார்கள் என்கிறார்கள். இதோ இந்த மேடையில் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருப்பது டுவிட்டர் அரசியலா? களத்திற்கு வந்து போராடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.

    நாங்கள் யாரோடும் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக குதிரை பேரம் பேச மாட்டோம். கூட்டணி என்பது ஏமாற்று வேலை. இதனை தற்போதைய அரசியல் நிலவரங்கள் நமக்கு உணர்த்துகிறது. நேர்மையான அரசியலை உருவாக்குவதே நம்முடைய கடமை.

    காவிரி டெல்டா மாவட்டங்களை பொருத்த வரை இப்பகுதியினை பசுமை வேளாண் பகுதி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழக மக்களின் நலன் பாதுகாக்கப்படுவது தான் மக்கள் நீதி மையத்தின் முக்கிய குறிக்கோளாகும். தமிழகத்தை மேம்பாடு செய்வதற்கு டெல்லி குறுக்கே நிற்குமேயானால் டெல்லியை ஆள்பவர்கள் யார் என்பதை நாம் தீர்மானித்து மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கு இன்னும் 45 நாட்கள் தான் உள்ளது. எனவே அதற்கான முடிவுகளை நீங்கள் இன்றைக்கு தீர்மானிக்க வேண்டும். இந்த நாட்டை அனைவரும் பாதுகாப்போம். நாளை நமதே.

    இவ்வாறு அவர் பேசினார். #Kamalhassan

    Next Story
    ×