search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த் பாணியில் தனித்து களம் இறங்கும் கமல்- முதல் தேர்தலிலேயே முத்திரை பதிப்பாரா?
    X

    விஜயகாந்த் பாணியில் தனித்து களம் இறங்கும் கமல்- முதல் தேர்தலிலேயே முத்திரை பதிப்பாரா?

    விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. #KamalHaasan #Vijayakanth
    சென்னை:

    சினிமாவில் இருந்து அரசியல் களத்துக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றனர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். இவர்களுக்கு பின்னர் பல சினிமா நட்சத்திரங்கள், அரசியலில் குதித்திருந்தாலும் யாரும் நிலைக்கவில்லை.

    அதே நேரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், அரசியல் களத்தில் வேகமாக முன்னேறினார். கட்சியை தொடங்கிய அடுத்த ஆண்டே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தனி ஆளாக விஜயகாந்த் களம் இறங்கினார். அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. கணிசமான ஓட்டுகளை அள்ளியது. விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி அனைவரின் புருவங்களையும் உயரச் செய்தார்.

    முதல் தேர்தலிலேயே தே.மு.தி.க. வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று ஆச்சரியப்படுத்தினர். இதுவே 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்ததாக கூறப்பட்டது.

    இதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தார்.

    இதன் மூலம் தே.மு.தி.க., 2-வது தேர்தலிலேயே 16 அடி பாய்ந்தது.

    இதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி உதயமான மக்கள் நலக் கூட்டணி மண்ணை கவ்வியது. 2 தேர்தல்களில் ஏறுமுகமாக இருந்த விஜயகாந்தின் செல்வாக்கு 2016-ம் ஆண்டு தேர்தலில் அடியோடு சரிந்தது. அதில் இருந்து மீள்வதற்கு விஜயகாந்த் போராடிக் கொண்டிருக்கிறார்.

    கட்சியை தொடங்கி ஓராண்டில் விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது போல கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கிறார்.



    தேர்தல் களத்தில் கமலின் இந்த முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கமல்ஹாசனை பொறுத்த வரையில், புதிய கட்சியை தொடங்கிய பின்னர் கிராமப்புறங்கள் தொடங்கி, நகர்ப் பகுதிகள் வரையில் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

    புதிய வாக்காளர்களான இளைஞர்கள் நிச்சயம் மாற்றத்தை விரும்பி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதே கமலின் நம்பிக்கையாக உள்ளது. இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.

    இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசவும் கமல் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளையும் ஊழல் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் கமல், தேர்தல் களத்தில் அதனை வேகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

    விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல். ஆனால் கமல் சந்திப்பதோ பாராளுமன்ற தேர்தல். மாநில கட்சியாக இருக்கும் மக்கள் நீதி மய்யம், பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் அதே வேளையில் புதிய மாற்றத்துக்காக எங்களை ஆதரியுங்கள். “நாளை நமதே” என்கிற கோ‌ஷத்துடன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மத்தியில் யாருக்கு ஆதரவு? யார் பிரதமர்? என்பது போன்ற வி‌ஷயங்களை பற்றி பிரசாரத்தின் போது கமலால் பேச முடியாது என்பது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    எது எப்படி இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் களம் நிச்சயம் கமலுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் முன்னுக்கு வந்ததை போல கமலும் கவனிக்கப்படும் புதிய அரசியல்வாதியாக அவதாரம் எடுப்பாரா? இந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Vijayakanth
    Next Story
    ×