search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது: முக ஸ்டாலின் பேச்சு
    X

    திமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது: முக ஸ்டாலின் பேச்சு

    அதிமுக- பாமக இணைந்தாலும் திமுகவை தோற்கடிக்க யாராலும் முடியாது என முக ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK
    சென்னை :

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கொரட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபை கூட்டத்திலும், பின்னர் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் பேசிய தாவது:-

    ஊராட்சி சபை கூட்டம் உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க பயன்பட போகிறது. இது கட்சிக்காக நடத்தக்கூடிய கூட்டம் அல்ல.

    உங்கள் பிரச்சினைகளை எல்லாம் நானே மாவட்ட கலெக்டரிடம் பேசி, என்னென்ன பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் என்று செய்யச்சொல்லி கேட்கும் அதிகாரம் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி வந்ததற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் இப்பிரச்சினைகள் எல்லாம் இருந்திருக்காது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்த போகிறோம்.

    அ.தி.மு.க.வுடன் பா.ம.க., பா.ஜனதா கூட்டணி சேர்ந்திருக்கிறது. பா.ஜனதாவுடன் சேரக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக சொன்னது ஜெயலலிதா. நீட் தேர்வு கொண்டு வந்த பா.ஜனதாவுக்கு பக்கபலமாக ஊழல் அ.தி.மு.க. சேர்ந்து உள்ளது.

    பா.ஜனதா தனியாக நின்றால் ஜெயிக்க முடியாது என்பது அ.தி.மு.க.வுக்கு தெரியும். வாங்குகிற ஓட்டுகூட பா.ஜனதாவுடன் சேர்ந்தால் கிடைக்காது என்று நன்றாக தெரியும். தெரிந்தும் சேர காரணம் பயம். மிரட்டி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது.

    கொரட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்.


    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்த ஆட்சியை பற்றி அ.தி.மு.க. என்ற ‘கழகத்தின் கதை’ என்று சொல்லி, அ.தி.மு.க.வினர் அடித்து கொண்டிருக்கிற கொள்ளை, ஊழல்களை புத்தகமாகவே வெளியிட்டு இருக்கிறார்கள்.

    உயிரே போனாலும் அ.தி.மு.க.வுடன் சேர மாட்டோம். திராவிட இயக்கங்களின் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம் என்று சொன்னவர்கள் பா.ம.க. தலைவர் மற்றும் அந்த கட்சியில் இருப்பவர்கள். ஆனால், இன்றைக்கு சேர்ந்திருக்கின்றார்கள் என்றால் ஏதோ ஒரு ஆசை தான் காரணம். என்ன தான் கூட்டணி வைத்தாலும், தி.மு.க.வை தோற்கடிக்க யாராலும் முடியாது.

    ஜெயலலிதா இருந்தபோது பா.ஜனதா, பா.ம.க.வுடன் சேரவில்லை. பா.ம.க.வை ஒழிப்பது தான் முதல் வேலை என்றார் ஜெயலலிதா. அதேபோல் ஜெயலலிதாவை ஒழிப்பது தான் எங்கள் முதல் வேலை என்று டாக்டர் ராமதாஸ் சொன்னார். ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சியோடு இவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களோடு கூட்டணி வைத்து இன்றைக்கு தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    மோடி அரசு இப்போது திடீரென விவசாயிகளுக்கு 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் கொடுக்க போவதாக அறிவித்துள்ளது. இது மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படுகிற பொய். ஆகவே இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK
    Next Story
    ×