search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி ஒப்பந்தம் - அதிமுகவுக்கு ராமதாஸ் விடுத்த 10 கோரிக்கை
    X

    கூட்டணி ஒப்பந்தம் - அதிமுகவுக்கு ராமதாஸ் விடுத்த 10 கோரிக்கை

    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுகவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார். அவை வருமாறு:-

    1. காலம் காலமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வந்த காவிரி பாசன மாவட்டங்கள் இப்போது படிப்படியாக ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவும், பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு இறுதியில் மேலும் இரு ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. அதன் காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    எனவே கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் தொடங்கி புதுக்கோட்டை - ராமநாதபுரம் மாவட்ட எல்லை வரை உள்ள காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

    2. தமிழகத்தின் பாசனத் தேவைகளை ஓரளவு நிறைவேற்றக்கூடிய அளவில் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

    ரூ.60,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 1100 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும். இது கர்நாடகத்திடமிருந்து நாம் பெறக்கூடிய காவிரி நீரை விட ஆறு மடங்குக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தவிர அத்திக்கடவு - அவினாசித் திட்டம், பாலாறு பாசனத் திட்டம், பாண்டியாறு, காவிரியில் தடுப்பணைகள், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் உள்பட 20 பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    3. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கவுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் சமூகநீதி யாருக்கு தேவை என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    எனவே, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்து சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

    4. ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அதற்கான தீர்மானத்தை கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. அதன்பின் 164 நாட்களாகியும் இதுவரை எந்த பயனும் இல்லை.

    இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் மூலமாக ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனரை திருப்பி அனுப்பச் செய்ய வேண்டும். பின்னர் அதே பரிந்துரையை அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்கும்போது வேறு வழியின்றி அதை ஆளுனர் ஏற்றுக்கொண்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்து தான் தீர வேண்டும்.

    5. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தலா 500 மதுக்கடைகளை மூடியது. அதன்பிறகு வேறு எந்த மதுக்கடைகளும் மூடவில்லை. இந்த வி‌ஷயத்தில் வாக்குறுதி கடைபிடிக்கப்பட வேண்டும்.



    அதன்படி உடனடியாக தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மீதமுள்ள மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்க வேண்டும்.

    6. தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைவது, கடல் நீர் ஊடுருவுதல், பாலங்கள், அணைகள் போன்றவை வலிமை இழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் செயற்கை மணல் உற்பத்தியையும், வெளிநாட்டு மணல் இறக்குமதியையும் அதிகரிப்பதன் மூலம் இப்போது செயல்பாட்டில் உள்ள மணல் குவாரிகளை படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    7. தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அந்த கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பதால் அவற்றை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    8. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்

    மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்காமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    9. கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, ரூ.5,800 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார்.

    கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

    10. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies

    Next Story
    ×