search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இளைஞர்கள் ஆவேசம்
    X

    சிவச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இளைஞர்கள் ஆவேசம்

    அரியலூர் வீரர் சிவச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது’ என்று இளைஞர்கள் ஆவேசமாக கோ‌ஷம் எழுப்பினர். #PulwamaAttack
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தில் அரியலூரை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் பலியாகினர். இருவரின் உடல்களும் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.

    முன்னதாக சிவசந்திரனின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.20 லட்சத்திற்கான காசோலையை சிவச்சந்திரன் குடும்பத்தினரிடம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

    பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் சிவசந்திரனின் உடல், அவருக்கு சொந்தமான நிலத்தில் 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    அஞ்சலி நிகழ்ச்சியின் போது சிவசந்திரனின் தந்தை சின்னையன், மகன் சிவமுனியன் ஆகியோர் ராணுவ உடை அணிந்திருந்தனர். சிவமுனியன், தந்தையின் உருவப்படத்திற்கு முத்தமிட்டது அனைவரையும் கண்கலங்க செய்தது.

    மேலும் அஞ்சலி செலுத்த வந்திருந்த அரசியல் கட்சியினர், இளைஞர்கள், பொது மக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தி வந்ததோடு, கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டையை சட்டையில் குத்தியும் வந்திருந்தனர். வாய் பேச முடியாத சிவசந்திரனின் தங்கை ஜெயசித்ரா, அண்ணனின் உடல் இருந்த மரப்பெட்டியை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், இளைஞர்கள் பலர், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். ராணுவ வீரர்களின் ரத்தம் வீண் போகக்கூடாது என்று கூறி பாகிஸ்தானுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். #PulwamaAttack
    Next Story
    ×