search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமருக்கு அனுப்பிய மணியார்டர் - தஞ்சை விவசாயிகளுக்கு திரும்பி வந்தது
    X

    பிரதமருக்கு அனுப்பிய மணியார்டர் - தஞ்சை விவசாயிகளுக்கு திரும்பி வந்தது

    25 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரூ.17 மணியார்டர், சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை என்று தஞ்சை விவசாயிகளுக்கு திரும்பி வந்தது.
    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமான அறிவிப்பு இடம் பெறாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

    இதையடுத்து பட்ஜெட்டில் அறிவித்த ரூ.6 ஆயிரம் என்பது நாளொன்றுக்கு ரூ. 17 என கோரி தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடந்த 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 25 விவசாயிகள் தலைமை தபால் நிலையத்துக்கு சென்று பிரதமர் மோடிக்கு ரூ. 17 மணியார்டர் அனுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மணியார்டரில் சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை என்று அந்த மணியார்டர் அந்தந்த விவசாயிகளின் முகவரிக்கே திரும்பி வந்தது.

    இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து பிரதமர் மோடிக்கு மணியார்டர் அனுப்பினோம். ஆனால் இந்த மணியார்டரை வாங்கக்கூடாது என வேண்டுமென்றே எங்களுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர் என்றனர்.

    Next Story
    ×