search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் லாரி தீப்பிடித்து எரிந்தது
    X

    திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் லாரி தீப்பிடித்து எரிந்தது

    திருவள்ளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் நின்றிருந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மற்றும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் வட்டார அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த கிடங்கிலிருந்து நாள்தோறும் அனைத்து ரே‌ஷன் கடைகளுக்கும் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரே‌ஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது ஈக்காடு கண்டிகையை சேர்ந்த தாமு என்பவரது லாரியின் டீசல் டேங்க் திடீரென தீப்பற்றி தானாக ஓடத் தொடங்கியது.

    இந்த லாரி சுமார் 50 அடி தூரம் ஒடி முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி நின்றது. இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த ஓட்டுனர்கள் ஆனந்தன்(55), பாபு ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இது குறித்து திருவள்ளூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருவள்ளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வ ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். நுகர்பொருள் வாணிக கிடங்கில் தீ பரவாமல் தடுக்கும் வகையில் அவர்கள் ஒரு மணிநேரம் போராடி லாரியில் பற்றிய தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் லாரி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. காயம் அடைந்த டிரைவர்கள் இருவரையும் திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நின்றிருந்த லாரியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் லட்சக்கணக்கான மதிப்பிலான அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. தீப்பற்றி எரிந்த லாரி முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி நின்றதால் அவை தப்பியது. அதேபோல் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் வட்டார அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகங்களும் தப்பியது.
    Next Story
    ×