search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை- ரஜினி முடிவு பற்றி தலைவர்கள் கருத்து
    X

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை- ரஜினி முடிவு பற்றி தலைவர்கள் கருத்து

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Rajinikanth #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தமிழிசை சவுந்தரராஜன்

    பாராளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை நேர்மறையான கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

    அஜித், ரஜினி அறிக்கை வெளியிட்டால் உடனே பா.ஜனதாவுக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள். ரஜினியின் அறிவிப்பு பாரதிய ஜனதாவுக்கு எதிரானது கிடையாது.

    மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்சனையை தீர்த்தது யார்? என மக்களுக்கு தெரியும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான்.

    திருமாவளவன்


    ரஜினியின் அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது.

    கே.பாலகிருஷ்ணன்

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி தெரிவித்திருப்பது அரசியல் செயல்பாடாக இல்லை. ரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால்தான் தண்ணீர் பிரச்சனை தீரும். அதற்கு எங்கள் கூட்டணி மூலம்தான் தீர்வு கிடைக்கும்.

    நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால் எதிரானவர்களுக்கு ஆதரவா? என புரிந்து கொள்ளப்படும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும்.

    வைகைச் செல்வன் (அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்)

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்பதன் மூலம் ரஜினியின் அரசியல் பயணம் நீர்த்து போய் விட்டது. 1996 முதல் ஒவ்வொரு முறையும் அரசியலில் நுழைவேன் என்று கூறுவதை இந்த அறிவிப்பு மூலம் நீர்த்து போக செய்து விட்டார்.

    கே.பி. முனுசாமி (அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்)

    ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தல்தான் எனது இலக்கு என்று கூறி இருப்பது அவரது முடிவு. ஆனால் அவர் முதலில் மக்களை சந்திக்கட்டும். பிறகு தேர்தலை சந்திக்கலாம்.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

    ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறுவது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என தெரிகிறது.

    பட்டிதொட்டி எங்கும் தடையில்லா தண்ணீர் கிடைக்க அ.தி.மு.க. அரசு தான் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.#Rajinikanth #LSPolls
    Next Story
    ×