search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக கூட்டணி அறிவிப்பு 24-ந்தேதி வெளியாக வாய்ப்பு
    X

    அதிமுக கூட்டணி அறிவிப்பு 24-ந்தேதி வெளியாக வாய்ப்பு

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப் 24-ந்தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.

    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் 2 முறை பேசி உள்ளனர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கத்தின் விருந்தினர் மாளிகையில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் மத்திய மந்திரி பியூஷ்கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். மீண்டும் பேசுவதற்காக நாளை மறுநாள் பியூஷ்கோயல் சென்னை வருகிறார்.

    இதேபோல் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த 3 கட்சிகளும் அ.தி.மு.க.வில் அதிக தொகுதிகளை கேட்டு வருவதால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

    ஜெயலலிதா இருக்கும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும் முன் கூட்டியே அறிவிப்பார்.


    அதே பாணியை இப்போதும் செயல்படுத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளை விட்டுக் கொடுக்க உள்ளதால் 25 தொகுதிகளில் யார்-யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 20 பேர்களுக்கு ‘சீட்’ கிடைக்கும் என்றும் மேலும் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை முடிவு செய்து இறுதி செய்து விட வேண்டும் என்றும் மூத்த நிர்வாகிகள் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நல்ல நாள் பார்த்து 25 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-

    ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.தி.மு.க. முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள், இப்போதைய அமைச்சர்கள், அவர்களின் மகன்கள் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டுள்ளனர்.

    இதனால் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக நிச்சயம் சிலர் போர்க்கொடி தூக்குவார்கள். இதை தவிர்க்க முன் கூட்டியே வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தயாராகி வருகிறோம்.

    ஜெயலலிதா இருந்தபோது வேட்பாளர்கள் தேர்வில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் இந்த தேர்தலிலும் பின்பற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #ParliamentElection
    Next Story
    ×