search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    X

    ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

    ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில், 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    தஞ்சாவூர்:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. தஞ்சை திலகர் திடலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கும் இந்த திருமண விழாவுக்கு துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர். வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், சந்திரகாசு, எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன், ராமஜெயலிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த திருமண விழாவில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளரும், அமைச்சருமான தங்கமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஆர்.காமராஜ், துரைக்கண்ணு, அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 126 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

    விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பிரிவு நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். திருமண விழா முடிந்தவுடன் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

    இந்த திருமண விழாவுக்காக தஞ்சை திலகர் திடலில் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமர்ந்து திருமண விழாவை கண்டு களிக்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளன.

    திருமணத்தையொட்டி மணமக்களுக்கு பட்டு வேட்டி, சட்டை, பட்டுச்சேலை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அரை பவுன் தாலியும் வழங்கப்பட உள்ளது. மேலும் சீர்வரிசையாக 2 குத்துவிளக்குகள், மண் விளக்கு, சொம்பு, பூஜை கூடை, குக்கர், தோசைக்கல், கரண்டி, அன்னக்கை, கரண்டி, டம்ளர், ஜக்கு, முறுக்கு அச்சு, சல்லடை, சாப்பாடு தட்டு, பூ வாளி, குடம், தாம்பாலம், இட்லி பானை, அரிவாள்மனை, தேங்காய் திருவி, பூரி கட்டை, கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    Next Story
    ×