search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தாறு வீரர் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி- சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம்
    X

    கயத்தாறு வீரர் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி- சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம்

    காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கயத்தாறு வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். #PulwamaAttack #Subramanian
    கயத்தாறு:

    காஷ்மீரில் பயங்கரவாதி தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (வயது30) வீரமரணம் அடைந்தார்.

    இவர் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் 10-ந்தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார்.

    நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந் தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.



    சுப்பிரமணியன் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மற்ற வீரர்கள் உடல்களுடன் திருச்சி வந்தது.

    அங்கு அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடலை இறக்கிய பிறகு கயத்தாறு வீரர் சுப்பிரமணியன் மற்றும் கேரளா, கர்நாடகா வீரர்களின் உடல்களுடன் தனி விமானம் மதுரை சென்றது.

    பகல் 12.40 மணிக்கு இந்த விமானம் மதுரை வந்தடைந்தது. அங்கு கயத்தாறு வீரர் சுப்பிரமணியனின் உடல் இறக்கப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன், போலீஸ் ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியனின் உடல் தனி வாகனத்தில் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்துகிறார்.  இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, இன்று மதியம் மதுரை போய்ச் சேர்ந்தார்.  

    அங்கிருந்து காரில் சவலாப்பேரி சென்று அஞ்சலி செலுத்துகிறார். மாலையில் சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்.

    மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியன் படத்தை அலங்கரித்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். #PulwamaAttack #Subramanian
    Next Story
    ×