search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் 60 கிலோ கஞ்சாவுடன் கார் பறிமுதல்
    X

    நாமக்கல்லில் 60 கிலோ கஞ்சாவுடன் கார் பறிமுதல்

    நாமக்கல்லில் வாகன சோதனையின் போது 60 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காரில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல்-கோட்டை சாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.

    போலீசார் சோதனை செய்ய முயன்றபோது காரில் இருந்த 2 பேர் இறங்கி ஓட்டம் பிடிக்க தொடங்கினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தினர். இதில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். ஆனால் மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். போலீசாரிடம் சிக்கியவர் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பரமத்திவேலூர் அருகே உள்ள மணியனூருக்கு கஞ்சாவை கடத்தி சென்று, அங்கிருந்து பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப இருப்பது தெரியவந்தது.

    பின்னர் காரில் சோதனை நடத்திய போலீசார், 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கஞ்சாவை காருடன் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் நாமக்கல் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார் ஆகியவற்றை சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிடிபட்ட பிரபாகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மணியனூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×