search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன? - அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
    X

    விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன? - அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

    தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Agriculturallands #Tasmac
    சென்னை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில், மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றும்படி மாவட்ட கலெக்டருக்கு கடந்த ஜனவரி 21-ந்தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இந்த இடம் வழியாக செல்லும் சாலையைதான் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர். விவசாய நிலத்தில் உள்ள இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘மனுதாரர் குற்றம் சாட்டும் டாஸ்மாக் மதுபானக்கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்றி, அது குறித்த அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அதேநேரம், தமிழகம் முழுவதும் எத்தனை டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் விவசாய நிலங்களில் உள்ளது? என்ற விரிவான அறிக்கையையும் வருகிற 20-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டனர். #Agriculturallands #Tasmac
    Next Story
    ×