search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
    X

    சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு

    ஊருக்குள் சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை துன்புறுத்தாமல் பிடித்து முகாமில் அடைக்கும்படி, தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Chinnathambielephant
    சென்னை:

    கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைந்துள்ள சின்னதம்பி யானையை, பிடித்து முகாமில் அடைக்க வேண்டும். வனப்பகுதிக்கு அருகேயுள்ள சட்டவிரோத செங்கல்சூளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு வழக்கு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கேட்டு மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதே சரியான முடிவாகும் என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அஜய் தேசாய் ஆஜராகி, யானையை பிடித்து முகாமில் அடைப்பதே சரியான முடிவாகும் என்று விளக்கம் அளித்தார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘சின்னதம்பி யானையினால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்களை யானை அழிக்கிறது. சின்னதம்பி யானையின் பாதுகாப்புடன், விவசாயிகள், பொதுமக்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்யவேண்டியதுள்ளது. விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு பழகிவிட்டதால், இனி வனப்பகுதிக்குள் யானை செல்லாது. வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முகாமில், சின்னதம்பி யானை நன்றாக பராமரிக்கப்படும். ஓரிரு மாதங்களில் பயிற்சி அளித்து, மற்ற யானைகளுடன் நெருங்கி பழக வைக்கப்படும்’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘யானை விவகாரத்தில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடந்து விடக்கூடாது. இந்த யானையை பிடித்து முகாமில் அடைப்பதுதான் நல்லது என்று வனத்துறையும், நிபுணர் அறிக்கையும் கூறுகிறது. அதனால், சின்னதம்பி யானையை பிடிக்க தகுந்த உத்தரவை தலைமை வனப்பாதுகாவலர் பிறப்பிக்க வேண்டும். அந்த யானையை பத்திரமாக முகாமில் அடைக்க வேண்டும். அதை பிடிக்கும்போதோ, வாகனத்தில் ஏற்றி முகாமுக்கு அழைத்து செல்லும்போதோ, உடல் ரீதியாக துன்புறுத்தக்கூடாது.

    இந்த நடவடிக்கையின்போது உயிர் சேதம் எதுவும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த யானையை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதிக்குள் மீண்டும் கொண்டு செல்வதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என்றும் நீதிபதிகள் கூறினர். #Chinnathambielephant

    Next Story
    ×