search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த காட்சி.
    X
    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த காட்சி.

    மானமுள்ளவர்கள் தான் மானநஷ்ட வழக்கு தொடர முடியும்- எடப்பாடி பழனிசாமிக்கு இளங்கோவன் சவுக்கடி

    தன் மீது மானநஷ்ட வழக்கு தொடர முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். #Edappadipalaniswami #EVKSElangovan
    திருச்சி:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஏரி, கால்வாயை தூர்வாரி பாக்கெட்டில் போட்டுக் கொண்டனர் என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

    இதையடுத்து முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறாக பேசியதாகவும், திருச்சி மாவட்ட அ.தி.மு.க. அரசு வக்கீல் சம்பத்குமார், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9.10.2018 அன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, வழக்கு விசாரணைக்காக இன்று திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அவர், இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கில் காங்கிரஸ் சார்பில் வக்கீல்கள் மகேந்திரன், ராஜேந்திர குமார், செந்தில், சரவணன், பிரபு ஆகியோர் ஆஜராகினர்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-



    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். என் மீது மானநஷ்ட வழக்கு தொடர முதல்வருக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் மானமுள்ளவர்கள் மட்டுமே மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும்.

    நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன். இந்த வழக்கையும் சந்திப்பேன். இப்படி மானநஷ்ட வழக்கு தொடர்ந்து என்னை யாரும் மிரட்ட முடியாது. நான் கொடநாடு கொலை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இனி பேசுவேன். அதற்கும் என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திப்பேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் சிறப்பாக செயல்படும். தமிழகத்தில் காமராஜர் பெயரை கூறினால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

    காமராஜர் பெயரை சொல்வதற்கு மோடிக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் காமராஜரின் எதிர்பாசறையில் இருந்து வந்தவர்கள் அவர்கள். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று கூறுவது, பஸ் நிலையத்தில் நின்று கொண்டு ஏதோ ஒருவர் நான் தான் ராஜா என்று கூறுவது போன்றதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #EVKSElangovan
    Next Story
    ×